
நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எதுவும் தாக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தாக்கப்பட்டதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளையில் 23 - 2 சரத்தின் பிரகாரம் நாடாளுமன்றில் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்பு கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நிமால் சிறிபால டி சில்வா மேலும் பேசுகையில், 10 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சபையில் தெரிவித்தார். அதனை நிரூபிக்குமாறு அவருக்கு நான் சவால் விட்டேன்.ஆனால் எதிர்க் கட்சித் தலைவர் பிரச்சினையில் இருந்து நழுவிச் சென்றுள்ளார். 2012 ஏப்ரல் மற்றும் ஜுலை மாதங்களில் நடந்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளையே அவர் சபையில் வெளியிட்டார். 10 பள்ளிகள் தாக்கப்பட்டது குறித்து அவர் எதனையும் முன் வைக்கவில்லை. இங்குருவத்தை பள்ளியிலோ ,அம்பன்வலையிலோ எதுவித சம்பவமும் நடக்கவில்லையென பொலிஸார் அறிவித்துள்ளனர். முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது எதுவித தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை. ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையிலே எதிர்க்கட்சித் தலைவர் சபையில் அறிக்கை விடுகிறார். வதுரம்ப ,நவகமுவ, அளுத்கமை ,பதுளை, பயாகலை, குருணாகல ஆகிய நகரங்களில் ஹலால் உணவு பகிஷ்கரிப்பு கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட சிறு சம்பவங்கள் இடம்பெற்றன.அவை தொடர்பில் பொலிஸார் தலையிட்டு சந்தேக நபர்களைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். சில சம்பவங்கள் தொடர்பில் இருதரப்பினருக்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டது.இன, மத ஒற்றுமையை குழப்புவதற்காக பிரிவினை வாதிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை ஒடுக்கத் தேவையான நடவடிக்கைகள் தயாரிக்கப்படுகிறது. இன, மத ஒற்றுமை தொடர்பில் சகல தரப்பினரையும் அறிவூட்டுவது அரசாங்கத்தைப் போன்றே எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் சிறு சம்பவங்களை பெரிதுபடுத்த எதிர்க் கட்சித் தலைவர் முயல்வதன் மூலம் இனவாத, மதவாத நெருப்பு மேலும் சுடர் விட்டெரியும். ஜனாதிபதியினதும், அமைச்சர்களினதும் முழுமையான ஒத்துழைப்புடனும் மகத்தலைவர்களினதும் பொலிஸ் திணைக்களத்தினதும் பங்களிப்புடனும் இனவாத, மதவாத பிரச்சினைகள் பரவுவதை ஆரம்ப கட்டத்திலே தடுக்க முடிந்தது. மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.நாட்டின் இன, மத முறுகல்கள் ஏற்படாதவாறு பொறுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டியது அரசாங்கத்தினது மட்டுமன்றி எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். இதற்காக எதிர்க்கட்சி வழங்கும் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஒத்துழைப்பன்றி தாய் நாட்டிற்கு வழங்கும் ஒத்துழைப்பே ஆகும் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.