புதன், பிப்ரவரி 20, 2013

மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் தொடர்பில் எந்தவொரு விவரமும் எம்மிடமில்லை.

newsயாழ்.மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் தொடர்பில் எந்தவொரு விவரமும் எம்மிடமில்லை. அத்துடன் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் 28ஆயிரம் பேர் என்பது சரியான எண்ணிக்கையல்ல. இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இன்னும் எத்தனை பேர் குடியமர்த்தப்படவுள்ளனர் என்று அரச அதிபரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் தொடர்பிலான விபரம் என்னிடமில்லை என்று அரச அதிபர் பதிலளித்தார். அப்படியானால் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 28 ஆயிரம் பேர் மீளக்குடியமர்வுக்காகப் பதிவு செய்துள்ளனரே என்று அரச அதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பதிவு செய்த எல்லோரும் இங்கில்லையே. அத்துடன் நாம் சில பிரதேசங்களை விடுவிக்கின்ற போது மீளக்குடியமர்வதற்கு பதிவு செய்த எல்லோரும் வருவதில்லை. எனவே 28 ஆயிரம் பேர் என்பது தவறானது. அது உத்தேசிக்கப்பட்ட மீளக் குடியமர்வு எண்ணிக்கை தான் என்று அரச அதிபர் பதிலளித்தார். மீளக்குடியமர்வுக்குப் பதிவு செய்தவர்கள் மீளக் குடியமர்வுக்கு வரவில்லை யென்பதற்காக மீளக்குடியமர வேண்டியவர்கள் இல்லை என்று எவ்வாறு தெரிவிக்க முடியும். மீளக்குடியமர்வுக்காக பதிவு செய்த எவராவது உங்களுக்கு தாங்கள் அந்தப் பிரதேசத்தில் மீளக்குடியமரவில்லை என்று கடிதம் மூலம் அறிவித்துள்ளனரா? என்று அரச அதிபரிடம் மீண்டும் கேள்வி எழுப்பிய போது, இதுவரை யாரும் கடிதம் தரவில்லை. இருப்பினும் மீளக்குடியமர்வுக்குப் பதிவு செய்த எல்லோரும் வருவார்கள் என்று நீங்கள் எப்பிடிக் கூறுவீர்கள் என்று பதில் கேள்வியெழுப்பினார். மீளக்குடியமர்வதற்குப் பதிவு செய்தவர்களை பதிவிலிருந்து எவ்வாறு நீக்குவீர்கள் எனக் கேட்டதற்கு அரச அதிபர் பதில் எதுவும் வழங்கவில்லை. மேலும் 28 ஆயிரம் பேர் மீளக்குடியமர்வதற்கு பதிவு செய்துள்ளனர் என்ற போதும் அது உத்தேசப் பெறுமானம் எம்மிடம் சரியாக எவ்வளவு பேர் மீளக்குடியமர வேண்டியுள்ளனர் என்ற எந்தத்தரவும் இல்லை என்று அரச அதிபர் கூறினார். உடுவில் மற்றும் சுன்னாகம் பகுதியில் வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில், அவர்கள் தற்போது தங்கியுள்ள பிரதேச செயலர் பிரிவிலேயே நிரந்தர வதிவிட அட்டையைப் பெறுமாறு அரச அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டு வருவதாக ஊடகவியலாளர்களால் அரச அதிபரிடம் கேள்யெழுப்பப்பட்டது. இவ்வாறான முறைப்பாடு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் அவ்வாறு எந்த அறிவித்தலும் விடுக்கவில்லை. முறைப்பாடு கிடைத்தால் ஆராயலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.