வியாழன், பிப்ரவரி 07, 2013

பொதுநலவாய அமைப்பின் நடவடிக்கை தொடர்பில் இலங்கை கடும் எதிர்ப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் ஒரு விடயமாக உள்ளடக்கப்பட்டமைக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் தனது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கையையும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியிருப்பது பொதுநலவாய ஒழுங்குக்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்பொழுது லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், லண்டன் நகரில் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்துள்ளார். இவ்வருடம் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கொழும்பில் நடத்துவது தொடர்பிலும், பொதுநலவாய வர்த்தக மாநாடு, மக்கள் அமைப்பு மற்றும் இளைஞர்கள் மாநாட்டை ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு அரசாங்கம் செய்துவரும் ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர், கமலேஷ் சர்மாவுக்கு விளக்கமளித்தார். பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் ஒரு விடயமாக உள்ளடக்கப்பட்டிருப்பதானது 2011ஆம் ஆண்டு பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிரானது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பொதுநலவாய அமைப்பானது அதில் அங்கத்துவம் வகிக்கும் 54 நாடுகளின் வேறுபட்ட கலாசாரங்கள், இறைமை என்பவற்றை பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். இந்த அமைப்பை அரசியல் மயமாக்க சில நாடுகள் முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. இதன் கட்டமைப்பையும், பொறிமுறையையும் வேறு நாடுகளின் உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த இடமளிப்பதும் இதன் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய வங்கியொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.