செவ்வாய், பிப்ரவரி 19, 2013

பொலிஸ் பேச்சாளர் சீருடைக்கே தகுதியற்றவர் – சுரேஷ்

தெல்லிப்பழை புகைப்படம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கும் கருத்தானது வெட்கக்கேடானது. பொலிஸ் பேச்சாளர் அவர் அணிந்திருக்கும் உடைக்கே தகுதியில்லாதவர். ஆயிரக்கணக்கான மக்கள் பிடித்துக் கொடுத்த நபரை இராணுவம் என்பதற்காக விடுவித்துவிட்டு, பொலிஸ் பேச்சாளர் சொல்லும் பொய்யும் புரட்டும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கே வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.வலி.வடக்கு மக்கள் தமது வாழ்வுரிமையை வலியுறுத்திக் கடந்த 15 ஆம் திகதி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் இடையில் சிலர் உட்புகுந்து குழப்பம் விளைவிக்க முயன்றனர். அவர்களில் ஒருவரைப் பொது மக்கள் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அந்த நபரைக் கைதுசெய்து கொண்டு செல்கின்றமை தொடர்பான ஒளிப்படமும் வெளியாகியிருந்தது. இவற்றை முற்றாக மறுத்த பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, இந்த ஒளிப்படங்கள் தொழில்நுட்பப் புனைவு என்றும், பொதுமக்கள் தங்களிடம் யாரையும் ஒப்படைக்கவுமில்லையென்றும், யாரையும் கைது செய்யவுமில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது, பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு சொன்னால் அவர் அணிந்திருக்கும் பொலிஸ் உடைக்கே யாரும் மரியாதை கொடுக்க மாட்டார்கள். இது வெட்கக்கேடான கருத்து. பொதுமக்கள் ஆயிரம் பேர் தமது கண் முன்னால் பொலிஸாரிடம் ஒருவரை ஒப்படைக்க, அவர் இராணுவம் என்ற காரணத்துக்காக விடுவித்துவிட்டு, பொலிஸ் பேச்சாளர் இப்படிக் கூறுவதை விட தனது பொலிஸ் சீருடையைக் கழற்றி எறிந்துவிட்டு இருக்கலாம். மேலும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பேச்சாளர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்லோரும் பொலிஸ் வேலைக்கும், பொலிஸ் உடைக்கும் பொருத்தமில்லாதவர்கள். இவர்கள் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கக் கூடியவர்கள் இல்லை. பொலிஸ் சீருடையே இவர்களால் அசிங்கப்படுன்றது என்றார். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இந்த விடயம் தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும் போது: பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு கூறியமை வெட்டக்கேடான விடயம். ஆயிரக்கணக்கான மக்கள், பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், நடந்த சம்பவத்தைப் பொலிஸ் பேச்சாளர் மறுத்திருப்பது கேலிக்கூத்தான விடயம். எதிர்க் கட்சித் தலைவர் உரையாற்ற முற்படும் போது, சிலர் குழப்பம் விளைவித்ததாகவும் அதனைத் தடுக்கவே அங்கு இராணுவம் வந்ததாகவும், இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். யாராவது குழப்பம் விளைவித்தால் அதனைத் தடுக்க பொலிஸார் தான் செல்ல வேண்டும். சகல ஊடகங்களும் பொலிஸார், குழப்பம் விளைவித்த நபரைக் கைது செய்துகொண்டு செல்லும் ஒளிப்படத்தை வெளியிட்டிருந்தன. இதன்பின்னர் பொலிஸ் பேச்சாளர் இதனைத் தொழில் நுட்பப் புனைவு என்று சொல்வது கேலிக்கூத்தானது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.