உதவி வழங்கும் நிகழ்வினைக் குழப்ப படைப்புலனாய்வு முகவர்கள் முயற்சி! கிளி. கிருஷ்ணாபுரத்தில் சம்பவம்

சுவிஸ்நாட்டின் சூரிஸ் மாநில உறவு ஒன்றின் பிறந்தநாள் பரிசாக கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் கிராமத்தின் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபரணங்கள் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் றொபேட் முன்பள்ளியில் நடைபெற்றது.அவர் அங்கு உரையாற்றுகையில், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலையில் முன்னுக்கு வரத் துடிப்பவர்களாகவும் நாமும் வாழ வேண்டும் எனத் துடிப்பவர்களாகவும் தான் தற்போது பல்வேறுபட்ட அடக்குமுறைகள், அடாவடித்தனங்களுக்குள் அகப்பட்டுத் தவிக்கின்றோம். இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாமும் மனிதர்களாக வாழ விரும்புகின்றோம். எமக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சுயமாகச் சிந்திப்பதற்கோ, சுயமாகச் செயற்படுவதற்கோ எமது மக்களுக்கு அனுமதியில்லை என்பதனை இன்றைக்கு இந்த மாணவச் சிறார்களுக்கு புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்குவதற்காக இந்த கிருஸ்ணபுரம் மண்டபத்தில் ஒன்று கூடுவதற்குக்கூட இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, மண்டபத்தினுடைய திறப்பு வழங்கப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஏன் இப்படியான அராஜகத்தையும் அடிமைத்தனத்தையும் எமது மக்கள் மீது திணிக்கின்றார்கள். நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் நாம் மக்களைச் சந்திக்கக்கூடாதா? நாம் மக்களுக்கு உதவி செய்யக்கூடாதா?கடந்த கால யுத்தங்களின் மூலமும் எமது மாணவச் சிறார்கள் கல்வியை இழந்தவர்களாகக்; காணப்படுகிறார்கள். தற்போதும் எமது பகுதிகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை உட்பட்ட பல்வேறு காரணிகளாலும் தேவையற்ற தலையீடுகளாலும் எமது மாணவச் சிறார்களின் கல்வி தான் பாதிக்கப்படுகின்றது. மாணவச் சிறார்களாகிய நீங்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத்தான் புலம்பெயர் உறவுகள் இவ்வாறான ஊக்குவிப்புக்களை செய்கிறார்கள். உங்களது கல்விக்காக எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். நீங்கள்தான் கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். கிருஸ்ணபுரம் றொபேட் முன்பள்ளியில் 2013.01.31 திகதி பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் கரைச்சிப் பிரதேசசபையின் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர் சேதுபதி, கிருஸ்ணபுரம் கிராம அலுவலர், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன், கிருஸ்ணபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.