அமெரிக்காவின் பிரேரணை சாதாரண விடயமல்ல! ஐநா பொருளாதார தடை விதிக்கும் சாத்தியம்! எச்சரிக்கிறார்---பேராசிரியர் திஸ்ஸ விதாரண
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாக கருதமுடியாது. என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சிக் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.இதன்மூலம் இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐநா சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியமில்லை என்று இலகுவாக எடுக்க முடியாது. இந்த நிலைமையை புலம்பெயர் புலி ஆதரவு மக்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்வர். எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்திற்கு வலியுறுத்திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற்கான வழி என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி பாராளுமன்ற தெரிவுக்குழுவைக் கூட்டி அரசியல் தீர்வை விரைவாக காண்பதன் மூலமே இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். ஜெனிவாவில் மார்ச் மாத 22வது கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மார்ச் மாத ஜெனிவா கூட்ட்த்தொடரில் அமெரிக்கா மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்போவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க உதவிச் செயலர்கள் தெரிவித்திருந்தனர். ஜெனிவாவில் அமெரிக்கா மற்றுமொரு பிரேரணையை கொண்டுவரவுள்ளது என்ற விடயத்தை இலகுவாக கருதமுடியாது. காரணம் முதல் தடவை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கம் மற்றும் பல்வேறு விடயங்களை வலியுறுத்தி அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தது. இம்முறை பிரேரணையின் உள்ளடக்கம் என்னவென்று தெரியவில்லை. எவ்வாறெனினும் இதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. அத்துடன் இதனை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வர். அதேவேளை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் இலங்கை தொடர்பில் தவறானதொரு அபிப்பிராயத்தைக் கூற முயற்சிப்பார்கள்.இது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் சாத்தியம் கொண்ட நகர்வாக அமையும். இதன் மூலம் இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐநா பாதுகாப்புச் சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்திற்கு வலியுறுத்திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற்கான ஒரே வழியாக அமையும் என்பதனை குறிப்பிடவேண்டியுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா எந்தவிதமான சமிக்ஞையை வெளிப்படுத்தும் என்று கூறமுடியாதுள்ளது. ஆனால் 13வது சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி பாராளுமன்ற தெரிவுக்குழுவைக் கூட்டி அரசியல் தீர்வை விரைந்து காண்பதன் மூலமே இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெறமுடியும். அதனை விடுத்து 13வது திருத்தச்சட்டம் ரத்துச் செய்யப்படும் என்று கூறிக்கொண்டிருந்தால் இந்தியாவின் நம்பிக்கையை வெல்லவமுடியாமல் போய்விடும் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.