வியாழன், ஜனவரி 24, 2013

கனடாவின் அதிரடி முடிவு - கலக்கத்தில் சிறிலங்கா

 லங்காவில் பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை நடத்துவதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் மனித உரிமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள கனடா, இது தொடர்பான முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது. இதற்கமைவாக பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு அவசர கூட்டமொன்றை நடத்த முடிவு செய்துள்ளது. குறித்த மாநாடு எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை சிறிலங்காவில் நடத்துவதாக முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா தொடர்பில் காட்டமான முறைப்பாட்டை முன்வைத்திருக்கும் கனடா, அங்கு ஜனநாயகமற்ற ஒரு சூழ்நிலை நிலவுவதால் அதனை வேறொரு அங்கத்துவ நாட்டில் நடத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளது. சிறிலங்காவில் இம்மாநாடு நடைபெறுமானால் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் மாநாட்டைப் புறக்கணிக்கும் அபாயம் இருப்பதையும் கனடா சுட்டிக்காட்டியுள்ளது. கனடாவின் இந்தத் திடீர் நடவடிக்கையால் மேற்படி கூட்டத்தை இலண்டனில் கூட்டி இறுதி முடிவை எடுக்க பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு தீர்மானித்துள்ளது. இலண்டனில் கூடவுள்ள பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு சிறிலங்கா தொடர்பான விசாரணைகளை நடத்தினால் அதற்கு சில கால அவகாசம் எடுக்கும் சூழ்நிலை ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் வாக்களிப்பதற்கான தகைமையை சிறிலங்கா தற்காலிகமாக இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடும். இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மாநாட்டை சிறிலங்காவில் நடத்தாதிருக்க பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தீர்மானத்தை எடுக்கும் வாய்ப்பே அதிகமென விடயமறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், அடுத்த மாதம் சிறிலங்கா செல்லும் கமலேஷ் சர்மா, சிறிலங்காவின் நிலைவரங்களைப் பார்வையிட்டு பேச்சுகளை நடத்தி இறுதியான முடிவுக்கு வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவில் பொதுநலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதேவேளை, பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்த தவறும் பட்சத்தில் அவ்வமைப்பிலிருந்து வெளியேறப் போவதாக சிறிலங்கா எச்சரித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.