உதயன் விநியோகப் பணியாளர் தாக்குதல் தொடர்பில் எதுவித தகவலோ கைதுகளோ இதுவரை இல்லை; டி.ஐ.ஜி
உதயன் பத்திரிகை விநியோகப் பணியில் ஈபடும் பணியாளர் தாக்கப்படுவது தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை அத்துடன் சம்பவம் குறித்து இதுவரை எதுவிதமாக தகவலுக்கும் கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உதயன் பத்திரிக்கை விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரையாரும் கைது செய்யப்பட்வில்லை. அத்துடன் சம்பவத்தினை அடுத்து தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பத்திரிகை விநியோகக்கடை உரிமையாளர்கள் என பலரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டும் குறித்த சம்பவம் தொடர்பில் எதுவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேக நபர்கள் தொடர்பிலோ அல்லது கைது தொடர்பிலோ கூறமுடியாதுள்ளது. எனினும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார். இதேவேளை கடந்த 10 ஆம் திகதி உதயன் காரியாலயத்தில் இருந்து பத்திரிகைகள் பருத்தித்துறைப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகிப்பதற்காக எடுத்து சென்ற உதயன் விநியோகப் பணியாளர் பிரதீபன் என்பவர் நெல்லியடி மாலுசந்திப் பகுதியில் வைத்து அதிகாலை 5.30 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து பத்திரிகைகளும் எரிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பலத்தகாயங்களுக்கு உள்ளான பணியாளரினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அதே தினத்தில் வல்வெட்டித்துறைப் பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு பத்திரிகையினை எடுத்துச் சென்ற மேலும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் பின்தொடர்ந்து துரத்தப்பட்டுள்ளார். அவர் தனது பாதுகாப்புக்கருதி வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தார். இந்த நிலையில் இதுவரை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.