திங்கள், ஜனவரி 21, 2013

தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஓய்ந்து விடவில்லை

News Serviceதமிழர்களின் உரிமைப் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. மாறாக அது இரத்தம் சிந்தாத வழியில், வன்முறைப் பாதையைத் தவிர்த்து, இன்னொரு வியூகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்னும் தெளிவாகச் சொன்னால் எமது போராட்டம் முன்னரைக் காட்டிலும் இப்போது பரவலடையத் தொடங்கி விட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் .மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.மு.இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்களை மாத்திரமில்லாது முஸ்லிம் மக்களையும் நேசித்தவர் அமரர் இராசமாணிக்கம். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான பிரச்சினையாகவே அவர் இனப்பிரச்சினையை நோக்கினார். தமது உரிமைகளுக்காக தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக் வேண்டும் என்று விரும்பினார். தற்போது இலங்கையில் சிங்களமும் தமிழும் அரச மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நடைமுறையில் தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றது. இந்த விவகாரத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், தமிழர்களின் தாயக நிலங்கள் அவர்களிடமே கையளிக்கப்பட வேண்டும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெனிவா தீர்மானத்தில் பல்வேறு நிபந்தனைகளை இலங்கைக்கு சர்வதேசம் விதித்திருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் அரசு நடைமுறைப்படுத்தியதாக இல்லை. அடுத்து வரும் வாரங்களில் சர்வதேசப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து, அரசின் நடவடிக்கைகள் குறித்து நேரடியாக அவதானிக்கவுள்ளனர். அதன் பின்னர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.சபையின் மனித உரிமைகள் சபையில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதன் போது தமிழர்களுக்கு சாதகமான பதில் ஒன்று கிடைக்கும் என நம்புகிறோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பை இணைப்பதற்கு அரசு பல்வேறு வழிகளில் முனைந்தது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தைக் கூட அது பிரயோகித்து எம்மை தெரிவுக்குழுவுக்குள் இழுக்க நினைத்தது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் மிக விரைவில் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கவுள்ளது. இதற்கு சர்வதேசமும் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.