திங்கள், ஜனவரி 21, 2013

ஜீ.எல்.பீரிஸிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்இந்தியா-தமிழக வாழ்வுரிமைக் கட்சி

இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்பது பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். புதுடில்லியில் இடம்பெறவுள்ள இந்திய - இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் பீரிஸ், இந்தியா சென்றுள்ள நிலையிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியா- இலங்கை இடையேயான வர்த்தக உறவு பற்றிய இரண்டு நாள் மாநாடு போட்டுப் பேசப் போகிறார்கள். இலங்கை அரசாங்கம் மீது பொருளாதாரத் தடை கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அரசு கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்திக்கொண்டு ரத்தக்கறை படிந்த கை குலுக்கிக்கொண்டு வர்த்தக நலன் பற்றி பேசுகிறார்களாம். இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி சர்வதேச சமூகமே கரிசனை காட்டி வருகிறது. போர்க் குற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அயைத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டாகிவிட்டது. ஆனால் ஒரு துரும்பையும் அசைத்துக்கூடப் போடாத இலங்கை அமைச்சர்களை டெல்லிக்கு வரவழைத்து இலாப - நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இலங்கையின் தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்களர் மயம். தமிழீழத் தேசமெங்கும் சிங்கள மொழி மயம். தமிழரின் சொந்தத் தாயகத்திலேயே அவர்களது குடிப்பரம்பலைக் குறைக்க திணிக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள். இதைப் பற்றி கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொந்தளித்துக் குமுறுவதெல்லாம் மன்மோகன்சிங் அரசுக்குத் தெரியவில்லை. அடுத்த மாதம் மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டம் வருகிறது. இப்போதும் கூட இலங்கை அரசிடம் போர்க்குற்ற நடவடிக்கைக்கான விளக்கம் கோரவில்லை இந்திய மத்திய அரசு. டில்லிக்கு வருகை தரும் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் வர்த்தக நலன் பேசுவத்தைக் கைவிட்டு தமிழர் வாழ்வுரிமை, போர்க்குற்றவாளிகள் மீதான நடவடிக்கை பற்றி இந்திய மத்திய அரசு பேச வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது' என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.