2013இற்குள் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு முடிவு – தேசிய அமைப்புக்களின் ஒன்றியம்!
2013ஆம் ஆண்டுக்குள் அரசு அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு முடிவுகட்ட வேண்டும். இவ்வருடத்தில் அரசிடம் நாம் விடுக்கும் முதலாவது கோரிக்கை இதுதான் என்று தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.அத்துடன், “13′ஐ ஒழித்துக்கட்டுவதற்கான எமது போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாகவும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2013ஆம் ஆண்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசமைப்பின் பிரகாரம் நிலையானதொரு தீர்வு காணப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ண தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவ்வொன்றியத்தின் உறுப்பினரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: இந்திய அரசால் பலவந்தமாக எமது நாட்டு அரசமைப்புக்குள் புகுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தை உடனடியாக நீக்கவேண்டும் என அரசுக்கு நாம் கடந்த வருடம் பல தடவைகள் அழுத்தங்களைப் பிரயோகித்தோம். இதற்கமைய அரசு இதுவிடயம் தொடர்பில் பரிசீலித்துவருகின்றது என நாம் நம்புகின்றோம். எனவே, அந்த அடிப்படையில் 2013 ஆம் ஆண்டுக்குள் குறித்த திருத்தத்தை அரசமைப்பிலிருந்து அரசு நீக்கவேண்டும். மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசிடம் நாம் விடுக்கும் கோரிக்கை இதுதான். அத்துடன், “13′ஐ நீக்குவதற்குத் தேவையான அனைத்துவித நடவடிக்கைகளையும் நாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்போம் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.