வியாழன், ஜனவரி 10, 2013

திவிநெகுமவை நிறைவேற்றிய அரசுக்கு 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாதா?: குகவரதன்

திவிநெகும சட்டமூலத்தை அவசர அவசரமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றிய அரசாங்கம், ஏன் தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதிகார பரவலாக்கலை வழங்க பின்னிற்கின்றது என்று கேள்வி எழுப்பியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.குகவரதன், அதிகாரத்தை வழங்காது வடபகுதியை இராணுவ மயமாக்கும் திட்டத்தையே முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் சட்டம் பொது விடயங்கள் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவருமான எஸ்.குகவரதன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது... திவிநெகும சட்டமூலத்தால் மாகாண சபை அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. எனவே, இது தொடர்பில் உயர் நீதிமன்றம் சென்று அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இப் பிரச்சினையால் நாட்டில் சட்டத்துறைக்கும் சட்டவாக்கல் சபைக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் தோன்றின. ஆனால் அரசாங்கம் பிடிவாதமாக திவிநெகும சட்ட மூலத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்டது. அதிகாரமற்ற மாகாண சபையையே அரசு வடக்கில் புகுத்த முனைகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. வடபகுதி தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமையை வழங்கி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதிகாரத்தை பரவலாக்கி தமிழ் மக்களுக்கு சிவில் நிர்வாகத்தை வழங்க அரசாங்கம் விரும்பவில்லை. வடக்கில் இராணுவ மயமாக்கலை ஏற்படுத்தி தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. யுத்தம் முடிந்து விட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது, நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என அரசாங்கம் தெரிவிக்கின்றது. அப்படியானால் ஏன் தமிழ் மக்களுக்கு சிவில் நிர்வாகத்தை வழங்க அரசாங்கம் மறுக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளால் இனங்களுக்கிடையே எவ்வாறு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அத்தோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்தியாவே 13ஆவது திருத்தத்தை இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தியது. ஆனால், இன்று அந்த 13ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. எனவே, 13ஆவது திருத்தத்தை பாதுகாத்து தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்கி, வடக்கு - கிழக்கு தமிழ் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் 'தார்மீகப்' பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. எனவே, இவ்விடயத்தில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் உறுப்பினர் எஸ்.குகவரதன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.