பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் விவாதம் ஆரம்பம்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் பாராளுமன்றத்தில் சற்றுமுன் ஆரம்பமாகியது.குற்றப் பிரேரணை சட்டத்துக்கு முரணானது என்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்தன. எனினும் தெரிவுக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்துக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச அனுமதியளித்தார். இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் பாராளுமன்றில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. இதனால், சபாநாயகர் சமல் ராஜபக்ச, 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார். முழுமையாக்கப்படாத அறிக்கையொன்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் எவ்வாறு விவாதிப்பது என்று சபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால், சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு பின்னர் பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து கடும் ஆட்சேபத்தை வெளியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள், சட்டத்துக்கு முரணான குற்றப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.