
பாராளுமன்றத் தெரிவுக் குழுவை எதிர்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துவிட்டதாலும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு அளிக்கப்படாததாலும் தனக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை ஆராய அமைக்கப்பட்ட தெரிவிக் குழுவின் அறிக்கையை, அரசாங்க உறுப்பினர்களின் அறிக்கை என்றுதான் கருத முடியும் என்று தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதிக்கு எதிராக வைக்கப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஆராய்ந்த தெரிவுக் குழு அவர் மீதான 3 குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தியது. ஏனைய இரண்டில் இருந்து அவரை விடுவித்தது. மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் முதல் ஐந்து குற்றச்சாட்டுகள் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் முதல் நாளிலேயே தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா வெளிநடப்பு செய்தார். இதில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு அடுத்தநாள் விலகிக் கொண்டனர். அதன் பிறகுதான் தலைமை நீதிபதி மீது குற்றம் காணப்பட்டதாக தெரிவுக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஷிராணி பண்டாரநாயக்கா தனது வழக்கறிஞர்கள் மூலமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெரிவுக் குழுவின் அறிக்கை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தனக்கு கிடைத்தவுடனேயே அது குறித்து தலைமை நீதிபதி பதிலளிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரின் வாதத்தை மாத்திரம் ஏற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குறுக்கு விசாரணைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டால் முக்கிய சாட்சிகள் அளித்துள்ள ஆவணங்களின் உண்மையற்ற தன்மையை தன்னால் நிருபிக்க முடியும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இருந்து எதிர்கட்சிகள் வெளியேறிய பிறகு அளிக்கப்பட்ட அறிக்கையை தெரிவுக் குழுவின் அறிக்கை என்று கூற முடியாது என்றும் இதை அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை என்றுதான் கூற முடியும் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். இந்த விசாரணை ஆவணங்கள் அடிப்படையில்தான் அமையும் என்று முதலில் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் வெளிநடப்பு செய்த பிறகு, 16 சாட்சியங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கூறியது பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யக் கூடிய வாய்ப்புகள் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தன்மீது கூறப்பட்டுள்ள அனைத்து புகார்களும் அடிப்படையற்றவை என்றும், காழ்ப்புணர்வால் கூறப்படுபவை என்றும் தான் குற்றமற்றவர் என்றும் தலைமை நீதிபதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். தெரிவுக் குழுவின் பரிந்துரைகள் தனக்கு கிடைத்தவுடன், தன்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை தன்னால் நிருபிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.