யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து அறிவதில் நோர்வேத் தூதுவர் தீவிர கவனம் செலுத்தினார். யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இது தொடர்பான விடயங்களை நேரில் கேட்டறிந்தார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லொச்சன் மற்றும் தூதரக ஆலோசகர் டக்ரி மைக்கல் ஆகிய இருவரும் யாழ். மாவட்டத்துக்கு நேற்று வந்திருந்தனர். யாழ். அரச அதிபரை மாவட்டச் செயலகத்தில் நேற்றுக் காலையில் சந்தித்துக் கலந்துரையாடினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது சந்திப்பு. சந்திப்பின் முடிவில் கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்ததாவது: யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். யாழ். மாவட்ட மக்களுக்கு வீட்டுத்திட்ட, வாழ்வாதார உதவிகள் தேவை என்பதையும் அதனை மேற்கொள்ள உதவுமாறும் கோரிக்கை விடுத்தேன். நோர்வே அகதிகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களையும் அவர்களுக்கு விளக்கினேன். முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அவர்கள் ஆராய்ந்தது டன் அதற்கான ஏனைய செயல்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர். மேலும் இங்குள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் என்னிடம் கேட்டறிந்து கொண்டனர். குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலும் கேட்டனர். இறுதியில் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராயும்போது, யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் சில விடயங்களை என்னிடம் கேட்டனர் என்றார். அரச அதிபரைச் சந்தித்த நோர்வேக் குழுவினர், அதன்பின்னர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும் சந்தித்தனர். பின்னர் அவர்கள் முல்லைத்தீவுக்குச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.