பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு மூன்று மாத காலம் தடுப்புக்காவல்!
யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த மாத இறுதியில் மாவீரர் தின காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து படையினரால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நான்குபேர் வெலிக்கந்தை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். இவர்கள் நால்வருக்கும் 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறியிருக்கின்றார். இது குறித்து கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறை பீடாதிபதி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி, கைது செய்யப்பட்ட மாணவர்களில் எட்டுப் பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். எனினும், நான்குபேர் வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பல்கலைக்கழக சமூகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். இந்த மாணவர்களை விடுதலை செய்வதற்காக பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள் ஆகியோர் உரிய பல உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். ´எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படும் வரையில் தமது வகுப்புப் புறக்கணிப்பு தொடரும் என பல்கலைக்கழக மாணவர்கள் சொல்லியிருப்பதனால், பல்கலைக்கழகம் மாணவர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்து, தடைபட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல்கலைக்கழகத்தின் முயற்சிகள் மூலம் எப்போது இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பதை எங்களால் கூற முடியாதிருக்கின்றது´ என பேராசிரியர் கந்தசாமி கூறியிருக்கின்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.