திங்கள், டிசம்பர் 17, 2012

News Serviceவெலிக்கந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள், வரம்பு மீறி திமிருடன் செயற்படும் கோத்தபாயவுக்கே புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. "நீதிமன்றத்தின் செயற்பாடுகளைத் தன்னிச்சையாகச் செய்வதற்கு கோத்தபாய யார்? அவர் ஒரு சாதாரண அரச அதிகாரி. எனவே, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள்தான் அவர் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் அண்மையில் பயங்கரவாத விசாரணைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர் 8 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். நால்வர் வெலிகந்தவில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய முக்கிய கட்சிகள் தமது அதிருப்தியை வெளியட்டுள்ளன. எவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரின் வேலை அல்ல. எழுந்தமான போக்கில் பேசுவதே பாதுகாப்புச் செயலாளரின் இன்றைய வேலையாகவுள்ளது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கவேண்டுமா அல்லது அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டுமா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கவேண்டும். பொலிஸார் நள்ளிரவுகளில் மாணவர்களின் வீடுகளுக்குள் புகுந்தே அவர்களை அச்சுறுத்திக் கைதுசெய்துள்ளனர். இது ஒரு தவறான செயல். அவர்களைச் சரணடையுமாறு மிரட்டியது இரண்டாவது குற்றம். கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். எனினும், ஜனாதிபதியின் தம்பியான தனக்கு எதையும் செய்யமுடியும் என்ற திமிரில் பாதுகாப்புச் செயலாளர் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டுள்ளார் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.