சனி, டிசம்பர் 15, 2012
கிழக்கில் இதுவரை 300 பேர் கடத்தி படுகொலை!
போர் முடிந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் 300 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் அறிவூட்டும் நிகழ்வொன்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இங்கு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேற்கண்டவாறு கூறினார்.அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மட்டக்களப்பில் கடத்தப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் அடங்கிய விபரங்களை நாங்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். யார் இவர்களை கடத்தினார்கள் கொலை செய்தார்கள் என்பன போன்ற விபரங்களையும் அதில் தெரிவித்திருந்தோம் இன்னும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் 9:8 பகுதியில் சொல்லப்பட்ட விடயங்கள் இராணுவத்தை பாதுகாப்பதற்காக சொல்லப்பட்ட விடயங்களாகவே உள்ளன.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டு இன்னும் சிறைகளிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ளனர்.இந்த விடயத்தில் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ள பரிந்துரைகளுக்கு என்ன நடந்தது என நான் கேட்க விரும்புகின்றேன்.
சம்பூர் மக்கள்இ கிளிவெட்டியில் உள்ள அகதி முகாமில் இன்னமும் அகதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சரியான உணவுகள் கூட வழங்கப்படுவதில்லை.
சிறுபான்மை மக்களான தமிழ் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்றுவருகின்றது. இந்த சிங்கள குடியேற்றத்தை ஊக்குவிப்பது போன்ற பரிந்துரையும் இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியில் சமவாய்ப்பு இல்லாமையால்தான் ஆரம்பத்தில் போராட்டம் வெடித்தது. ஆனால் அதற்கான அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று சரியாக அமுல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.