வெள்ளி, நவம்பர் 23, 2012

இராணுவத்தால் அச்சுறுத்தல்; கூட்டமைப்பினர் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன், தான் அந்தப் பிரதேச இராணுவ அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து சர்வானந்தன் தெரிவித்ததாவது: நான் (நேற்று) 9.30 மணிக்கு கட்சி அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது சைக்கிளில் வந்த அந்தப் பகுதிக்கான இராணுவ அதிகாரி என்னை மறித்து, "நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேலை செய்கிறீர்கள். உங்கள் நடவடிக்கைகளை நாங்கள் அவதானித்து வருகிறோம். நாங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும் வேறு யாராவது எடுப்பார்கள். உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமானால் கட்சி வேலைகளை விட்டு அமைதியாய் இருங்கள்.'என்று மிரட்டினார்' என்றார். சம்பவம் தொடர்பில் அக்கராயன் பிரதேச பொலிஸ் நிலையத்தில் தான் முறையிட்ட போதும் இதனைத் தாம் ஏற்கமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டனர் என்றுசர்வானந்தன் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார். கிளிநொச்சிக்குச் சென்று முறையிடுமாறும் அவர்கள் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் தான் அங்கு சென்று முறையிட்ட போதும் அவர்கள் எனது முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட இராணுவத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் (இன்று) முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்று பொலிஸார் என்னை திருப்பியனுப்பினர் என்று அவர் மேலும் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்ததாவது: இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சர்வானந்தன் என்னிடம் முறையிட்டுள்ளார். வன்னிப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மீது இவ்வாறான அச்சுறுத்தலும் நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மூன்று மாதத்துக்கு முன்னரும் பூநகரிப் பிரதேச அமைப்பாளர் சிறீரஞ்சன் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். சம்பவங்கள் தொடர்பில் நாளை (இன்று) மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.