வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எவரை நிறுத்துவது என்பது தொடர்பில் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென அரசின் முக்கியமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஈ.பி.டி.பி. தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக ஆளுங்கட்சி நியமிக்கவேண்டுமென மற்றுமொரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இருவரும் மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதால் ஆளுங்கட்சிக்குள் இது விடயத்தில் கடும் பனிப்போர் உருவாகியுள்ளதாக நம்பப்படுகிறது. தேர்தல் களத்தில் இறங்கும் முதற்கட்ட வேலையாகவே கடந்த வாரம் முதல் கே.பி. மக்களுடன் நெருங்கும் நடவடிக்கைகளில் இறங்கிவருவதாக அரச வட்டாரங்களிருந்து தெரியவருகின்றது. கே.பி. எதுவித குற்றமற்றவரென அரசின் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளமையும் இதன் பின்னணியில்தான் என்று அந்த வட்டாரங்களிருந்து மேலும் அறியமுடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.