திங்கள், பிப்ரவரி 18, 2013

சிறிலங்கா தொடர்பில் பிரித்தானியாவின் இரட்டை முகம்

பிரித்தானியா தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக பிரித்தானியாவின் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு குற்றம்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டில் சுமார் இரண்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, சிறிலங்காவுக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுத் தளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக, 600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் சொட் கண்கள், என்பனவற்றை விற்க பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் சிறிலங்காவுக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், சிறிலங்காவுக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசமான மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதை கண்டிக்கும் வகையிலும், சிறிலங்காவின் மோசமான மீறல்களை விபரித்தும் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு தனது இன்றைய விரிவான தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது. மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் சிறிலங்காவுக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.