ஜெனிவாவுக்கு யாரை அனுப்புவது? - குழப்பத்தில் சிறிலங்கா
ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு, சிறிலங்காவின் சார்பில் யாரை அனுப்புவது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வழக்கம்போல, ஜெனிவா கூட்டத்தொடருக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்குவார் என்று கடந்தவாரம், கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார். எனினும், இம்முறை, அமைச்சர்கள் தவிர்க்கப்பட்டு, இராஜதந்திரிகளை கொண்ட குழுவோ சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், இதுகுறித்து நேற்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நிலைமைகளை அவதானித்தே, எத்தகைய இராஜதந்திரக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்புவது என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்யும்.” என்று பதிலளித்தார். “ஜெனிவாவுக்கு அரசியல் பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்றோ, அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்புவது என்றோ சிறிலங்கா அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. நிலைமைகளை அவதானிக்காமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஜெனிவாவில் நிலைமைகளை கையாள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படி அங்குள்ள சிறிலங்கா தூதவர் ரவிநாத் ஆரியசிங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அங்குள் பின்புலச் சூழலை அவதானித்து, கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்குரிய தயார்படுத்தல்களை அரசாங்கம் மேற்கொள்ளும்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.