வெள்ளி, பிப்ரவரி 15, 2013

யாழ் உண்ணாவிரத போராட்டத்தில் குண்டர் குழு அட்டகாசம்: பதற்றம் நீடிப்பு யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் முன்னால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் கொண்ட 15 பேர் அடங்கிய குழுவே தாக்குதலை மேற்கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அத தெரணவிற்கு தெரிவித்தார். இத் திடீர் தாக்குதல் சம்பவம் காரணமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்தும் அவர்களை கலைந்து போகுமாறு கோரியுமே இந்த குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்டவர்களில் நால்வரை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்களில் இருவரை மட்டுமே பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் ஏனைய இருவரையும் கைது செய்யவில்லை எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் அவ்விடத்தை விட்டுச் சென்ற பின்னரே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய இனந்தெரியாத குழுவை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டும் புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் ஒருவரது கமரா இனந்தெரியாத குழுவினரால் பறிக்கப்பட்டும் உள்ளது. வடக்கு பிரதேசத்தில் மீளக்குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வலி. வடக்கு மீள்குடியேறாதோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (15) உண்ணாவிரப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சி .சிறிதரன், ஈ .சரவணபவன், சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமசந்திரன் மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி அனந்தன், மனோகணேசன் மற்றும் விக்கிரமபாகு கருணாரட்ன என பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.