
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணய குழுவில் தமிழர்கள் எவரும் இடம்பெறாமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்க அதிபர் தலைமையிலான இக்குழுவில் தேர்தல் திணைக்களம், புள்ளி விபரத் தினைக்களம், மாகாண உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் நில அளவை திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மொத்தமாக ஆறு பேர் இடம்பெறுவார்கள் என்று இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்கின்ற போதிலும் அரசாங்க அதிபர் உட்பட நான்கு சிங்களவர்களும் இரு முஸ்லிம்களும் இந்தக்குழுவில் அங்கம் வகிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் புதன்கிழமை மட்டக்களப்பில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் தமிழரொருவரை நியமனம் செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தும் அந்த திணைக்களம் பக்கசார்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் நியமனம் பெற்றுள்ள குறித்த முஸ்லிம் அதிகாரி அந்த திணைக்கள அதிகாரியாக இல்லாத போதிலும் உள்ளூராட்சி திணைக்கள ஆலோசகர் என பதவி குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழர் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது" என்று துரைரட்ணம் கூறியுள்ளார். "கிழக்கு மாகாண சபையில் கணிசமான தமிழர்கள் பிரதிநிதிகளாக அங்கம் வகிக்கின்றார்கள். அது மட்டுமல்ல ஏனைய இனங்களைப் போல் தமிழர்கள் திருகோணமலை மாவட்டத்தில் வாழ்கின்றார்கள். அப்படியிருந்தும் கிழக்கு மாகாண சபையில் தமிழர் புறக்கணிக்கப்படுவது எந்ந வகையிலும் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல" என்றும் அவர் தெரிவிக்கின்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.