வியாக்கியானத்திற்கு அரசு தலைவணங்கவேண்டும்: முஜுபுர்.
அரசியலமைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வியாக்கியானத்திற்கு அரசாங்கம் தலைவணங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்றமே! மேலான்மையானது என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தாலும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் சட்டவாக்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் பாரிய சிக்கல்கள் தோன்றும். நாடாளுமன்றமே மேலான்மையானது என்று கூறிக்கொள்கின்ற அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக வரபிரசாதங்களை கொடுத்து உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்துக்கொண்டது. இது சுயாதீனம், இறைமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இடையிலான பிரச்சினையாகும். அதுமட்டுமன்றி அவ்வாறான உறுப்பினர்களுக்கு எதிரான தனிப்பட்ட வழக்குகளையும் அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டது. குறுக்கு வழியில் தம்மை பெரும்பான்மையாக மாற்றிக்கொண்ட இந்த அரசாங்கமானது உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு தலைவணங்க வேண்டும். பெரும்பான்மை இருக்கின்றது என்ற பிரமிப்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஏற்காமல் இருந்தால் மக்கள் கிளர்ச்சி நாட்டில் வெடிக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.