
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று சிறீலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார். நாளை திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மாணவர்கள் வருகைதராவிட்டாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமது விரிவுரைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். எனினும் வெலிக்கந்தை புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை விரிவுரைகளை பகிஸ்கரிப்பது என்ற மாணவர்களின் தீர்மானத்தில் இன்னும் மாற்றங்கள் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மாணவர்கள் தவறு இழைத்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விடுவிக்கவேண்டும் என சிறீலங்கா ஆசிரியர்கள் சங்கம் உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் சமூகத்திடம் தாம் உதவிகள் கோரி நிற்பதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரங்கள் சங்கதி24ன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.