
இலங்கையின் பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணைக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதைத் தீர்மானிப்பவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே இப்போது உள்ளார். எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியில், சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்த ஒரு நிலையில் இந்தப் பிரேரணையைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்த அரச தரப்பு, அதனை நிறைவேற்றியிருக்கின்றது. இது நிறைவேற்றப்படும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் இது நிறைவேற்றப்பட்டிருப்பது ஆச்சரியமானதுமல்ல. தீர்மானத்துக்கு ஆதரவாக பாராளுமன்றம் வாக்களித்திருந்தாலும், இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டியராக இப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே உள்ளார். நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் உருவாகியிருந்த மோதல் முக்கியமான ஒரு கட்டத்தைத் தாண்டிவந்திருப்பதை பாராளுமன்றத்தின் அங்கீகாரம் உணர்த்துகின்றது. இருந்த போதிலும் முரண்பட்டுள்ள தரப்புக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தருணம் இன்னும் கடந்து சென்றுவிடவில்லை எனவும் சிலர் வாதிடுகின்றார்கள். ஏனெனில் பாராளுமன்றம் பிரேரணையை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அதற்கான ஜனாதிபதியின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கால அவகாசம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆதனால், இந்த கால அவகாசத்தில் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியும் என நம்புவோரும் உள்ளனர். ஆனால், முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சுமூக நிலை நிலை காணப்படவில்லை. இலங்கையின் அரசியல் அவ்வாறான ஒரு தன்மையைக் கொண்டதாகவும் இல்லை. ஆக, இந்த முரண்பாடுகள் அடுத்த கட்டத்துக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கப்போகின்றது. நீதியரசருக்கு எதிரான இத்தீர்மானம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாவும் பெரும் கரிசனையைப் பெற்றிருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதையிட்டு தாம் மிகவும் கவலையடைந்திருப்பதாக பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நிமிடங்களில் அமெரிக்கத் தூரகத்தினால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தது என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது. இலங்கையில் நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் இருக்கக் கூடிய அதிகாரப் பகி;வு தொடர்பிலான கேள்விகளை இந்த விவகாரம் எழுப்பியிருக்கின்றது என்பதையும் அமெரிக்காவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஒவ்வொரு தரப்பினருக்கும் இருக்கும் உரிமையை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் மதித்து நடக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருக்கின்றது. சுர்வதேச ரீதியாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒன்றாக இந்தச் சம்பவம் அமைந்திருக்கின்றது என்பதைத்தான் அமெரிக்கத் தூதரகம் இவ்விடயம் தொடர்பில் அவசரமாக வெளியிட்ட அறிக்கை புலப்படுத்துகின்றது. அரசாங்கம் அதிரடியாக எடுத்த இந்த நடவடிக்கையை பல சிவில் சமூக அமைப்புக்களும் கண்டித்திருக்கின்றன. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டவலுவற்றவை என்பதை உயர் நீதிமன்றம் கூறியிருக்கின்றது. நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனம் செய்து பாராளுமன்றத்தில் இது விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டமை நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்து தொடரும் ஒரு சமிஞ்ஞையைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றது. ஒரு ஜனநாயக ஆட்சியில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை. சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என்பனவே அவை. இவை மூன்றும் சமமான நிலையில் நிறுத்தப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும். உருவாக்கப்படுகின்ற ஒரு சட்டம் நீதியானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு. பிரதம நீதியரசர் விவகாரத்தில் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப் பிரேரணை நீதிக்குப் புறம்பானது அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவோ அல்லது அல்லது அது தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துவதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் உயர் நீதமன்றத்தின் உத்தரவாக இருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் புறக்கணித்து அல்லது உதாசீனப்படுத்தித்தான் இந்தக் குற்றப் பிரேரணை விவாதத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு பல காரணங்களை அரசாங்கம் கூறலாம். நீதித்துறை சட்டவாக்கத்துறையைக் கட்டுப்படுத்த முடியாது என்று நியாயப்படுத்த முனையலாம். ஆனால், இது ஒரு பாதகமான முன்னுதாரணமாகவே அமைந்திருக்கின்றது. அதாவது நீதித்துறையின் முடிவை உதாசீனம் செய்து சட்டத்துறை செயற்பட முடியும் என்பதை இது உணர்த்தியிருக்கின்றது. எதிர்காலத்திலும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இது காரணமாக அமையலாம். இதனைவிட இந்தப் பிரேரணையின் அடிப்படையில் நீதித்துறை மீதான மக்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் அரச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட நீதியரசர்கள் தமது தீர்ப்பை சட்டத்துறை ஏற்கவில்லை என்ற கருத்தில் சட்டத்துறைக்கு எதிராகச் செயற்படும் ஒரு நிலையும் காணப்படுகின்றது. இந்த முரண்பாடுகள் தொடர்ந்தால் நீதித்துறையின் செயற்பாடுகள் முடங்கப்படும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவராக ஜனாதிபதியே உள்ளார். (தினக்குரல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.