கமல் எனக்கு எதிரியல்ல, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபம் தடை: ஜெயலலிதா விளக்கம்
கமலஹாசன் எனக்கு எதிரியல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடாது என்பதால்தான் விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார். விஸ்வரூபம் படம் தொடர்பாக அரசு எடுத்த தடை முடிவு குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். அதில், முக்கியக் காரணியாக சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான காவலர்கள் இல்லை என்றும், மாநில அரசுக்கு சட்டம் ஒழுங்கையும் பொதுமக்களிடம் அமைதியையும் நிலை நாட்ட வேண்டிய கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர் கூறியதிலிருந்து… * இந்தப் படம் வெளியானால், அது தொடர்பாக போராட்டம் வெடிக்கும் அபாயம் இருந்தது. * விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தலைமைச் செயலரைச் சந்தித்து மனு கொடுத்தார்கள். அது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் அறிவித்தார்கள். பல இடங்களில் வன்முறைகள் நிகழும் வாய்ப்பும் இருந்தது. இதுதொடர்பாக உளவுத் துறை அறிக்கைகளும் அரசுக்கு அளிகப்பட்டன. இதில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. எனவே தடை விதிக்கப்பட்டது. * இந்த விவகாரத்தில் பத்திரிகைகள், ஊடகங்களில் எனக்கும் இந்த விவகாரத்துக்கும் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மையில், ஜெயா டிவிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அது தனியார் டிவி நிறுவனம். அதில் எனக்கு எந்த பங்குகளும் இல்லை, நான் பங்குதாரரும் இல்லை. ஜெயா டிவியில் இந்தப் படத்தை வெளியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், இவ்வாறு நடந்துகொண்டதாக அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளார். இதில் எந்த விதத்திலும் தனிப்பட்ட வஞ்சமும் இல்லை. * மேலும், 1980களில் எம்ஜிஆருக்கு நான் ஒரு கடிதம் எழுதியதாகவும், அதில், கமல் ஹாசன் திரைப்பட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்றும் நான் அவருக்கு கடிதம் எழுதியதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார். இது ஒரு கட்டுக்கதை. இப்படி எல்லாம் எப்படித்தான் அவர்களுக்கு பேச வருகிறதோ? எம்.ஜி.ஆர். அப்போது மாநில முதல்வர். நான் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அவ்வளவே. எனவே இது தொடர்பாக கருணாநிதி மீது, அவதூறு வழக்கு தொடரப்படும். * விஸ்வரூபம் படம் 524 திரையரங்குகளில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தத் திரையரங்குகள் அனைத்துக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது. காவல் துறையில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால், குறைந்த காவலர்களைக் கொண்டு பணி புரிய வேண்டிய நிலை. அனைத்து திரையரங்குகளில் மூன்று வேலை நேரங்களில் காவலர்கள் பாதுகாப்புக்கு தேவைப்படுவதாக இருந்தால், 56,440 காவலர்கள் தேவைப்படுகின்றனர். இது ஒரு மாநில அரசால் இயலாத ஒன்று. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. இப்படி மிகக் குறைவான காவலர்களைக் கொண்டு எப்படி சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியும்? * விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அரசு தானாக முன்வந்து தடையை விதிக்க வில்லை. முஸ்லிம் அமைப்புகள் வந்து மனுகொடுத்து, தடை விதிக்க வேண்டும், இல்லாவிட்டால் போராடுவோம் என்று கூறியதன் அடிப்படையில், வன்முறைகளைத் தவிர்க்கவே அரசு அந்தப் படத்துக்கு தடை விதித்தது. * இந்த விவகாரத்தில், முஸ்லிம் அமைப்புகளும், கமல்ஹாசன் இருதரப்பும் அமர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட பேசிக் கொண்டால் அதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும். * நான் எதற்காக கமல் ஹாசனை பழி வாங்க வேண்டும்? அவர் ஒன்றும் என் எதிரி இல்லை. கமல் ஒரு விழாவில் வேஷ்டி அணிந்தவர்தான் பிரமதராக வர வேண்டும் என்று தெரிவித்ததால் நான் அவரது விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தேன் என்று கூறுகின்றனர். நான் சுமார் 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு போதிய அரசியல் அனுபவம் உள்ளது. கமல் ஹாசன் என் எதிரி இல்லை. அவர் ஒன்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று எனக்கு தெரியும். ஒரு விழாவில் அவர் அப்படிப் பேசியதற்காக நான் அவரை பழிவாங்குவதாகக் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. நான் எதற்காக அவரை பழிவாங்க வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.