ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு அமைச்சர்கள் மூவரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள், அரசியலமைப்பு, குற்றப்பிரேரணை, புதிய நீதியரசர் நியமனம் மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்கள், மரண அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட கேள்விகளை சரமாரியாக தொடுத்தனர். இக்கேள்விகளுக்கு அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா பதிலளிக்கையில், குற்றப்பிரேரணை விவகாரம் நிறைவடைந்து விட்டது. சட்டவாக்கம்,நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகியன தங்களுக்கு வழங்கப்பட்டள்ள வரையறைக்கு அப்பால் சென்றுவிடக்கூடாது என்றார் . இதேவேளை, மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எங்களுடன் இருந்தவர். ஏதாவது ஒன்றை பெரிதாக காண்பிக்கும் வகையில் சித்திரிக்கும் திறமை அவருக்கு கூடுதலாகவே இருக்கின்றது. ஆகையால், சட்டத்தரணிகளுக்கும் நீதிபதிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக புதிய கதையை அவர் உருவாக்கியிருக்கலாம். ஏன்? தெரிவுக்குழுவின் எங்களுடைய தலைவருக்கும் தான் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. என்றார். இடைமறித்த ஊடகவியலாளர்கள், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் 5 ஆவது குற்றச்சாட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு அல்ல, அது அவருடைய கணவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும். புதிய நீதியரசரோ, ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் ஆலோசகராக இருந்துள்ளார். அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர் முன்னாள் சட்டமா அதிபராக இருந்த தருணத்தில் பல முக்கிய வழக்குகள், குறிப்பாக எதிரணியைச்சேர்ந்தவர்களின் வழக்குகள் எவ்விதமான அடிப்படை காரணங்களும் இன்றி வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறான ஒருவரை எவ்வாறு நீதியரசராக நியமிக்க முடியும் என்று வினவினர். இந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் எவ்விதமான பதில்களையும் அளிக்காது அமைதியாகவே இருந்தனர். எனினும் தங்களை சற்று சுதாகரித்துக்கொண்ட அமைச்சர்கள் அவருக்கு எதிராக நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் தொடர்பில் தங்களுக்கு தெரியாது என்றனர். அது மட்டுமன்றி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, குறைக்கவோ எம்மால் முடியாது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.