ஞாயிறு, ஜனவரி 20, 2013

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரே நவநீதப்பிள்ளை இலங்கை செல்வார்!

இந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரே மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதப்பிள்ளை இலங்கைக்கு செல்வார் எனத்தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு ஆரம்பத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருவதை எதிர்த்தது. அதன் பின்னர் சர்வதேச ரீதியில் எழுந்த கடும் நெருக்கடிகளை அடுத்து, மனித உரிமை ஆணையாளர் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமையாளர் அலுவலகத்தின் ஆசியபசுபிக்-மத்திய, கிழக்கு-வட, அமெரிக்கப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஹன்னி மொஹாலி, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சோலர்ஸ் ஆ கிய இருவரையும் உள்ளடக்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் அவதானித்தனர். அதன் போது யாழ்ப்பாணத்தில் வைத்து கருத்து வெளியிட்ட மேற்படி ஐ.நா குழுவினர் மனித உரிமை ஆணையாளர் நவநீதப்பிள்ளை இலங்கை வருவதற்கு முன்னர் இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கே வந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். நவம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நாவின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரின் பின்னர், கடந்த டிசெம்பர் மாதம் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதியில் பிரதம நீதியரசருக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை இடம் பெற்றுக்கொண்டிருந்தது. இதனையடுத்து மனித உரிமை ஆணையாளர் நவநீதப்பிள்ளையின் வருகை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகை தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின் பிரகாரம் இந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரே மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு செல்வார் என்று அறியமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.