
கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருந்த மேல்மாகாணசபை முதலமைச்சர் பிரசன்னா ரணதுங்க, தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் கலந்துகொள்வதாக எதிர்பார்க்கப்பட்ட எம்பி அஸ்வரும் இன்றைய கூட்டத்திற்கு வருகை தர வில்லை. மேல்மாகாணசபை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில், கொழும்பு மாநகரசபை மேயர் முசாம்மில், மேல்மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் வேலணை வேணியன் பிரியாணி குணரத்ன, மன்சில், ரோய் போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாநகர ஆணையாளர் மற்றும் மாகாணசபை, மாநகரசபை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். 57ம் ஒழுங்கையை தமிழ் சங்கம் ஒழுங்கை என பெயர் மாற்றம் செய்வதை ஆட்சேபிக்கும் பெரும்பான்மையினத்தவர் சிலரும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒரு சிலர் 57ம் ஒழுங்கையில் வசிப்பவர்கள் அல்லர் என கூட்டத்தின்போது சுட்டிகாட்டப்பட்டது. அத்துடன், கொழும்பு தமிழ் சங்கம் ஒரு வர்த்தக நிறுவனம் என்ற அவர்களது ஆட்சசேபணையும் நிராகரிக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றம் சட்ட விதிகளின்படி முறையாக செய்யப்பட்டுள்ளது என ஜமமு உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். இந்த நிலைபாட்டை கொழும்பு மாநகர மேயர் முசாமிலும், ஆணையாளர் பத்ராணி ஜெயவர்தனவும் உறுதிபடுத்தினார்கள். இந்நிலையில் இதுபற்றிய தமது அறிக்கையை மேல்மாகாண முதலமைச்சரிடம் சமர்பிப்பதாக, மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உறுதியளித்தார். முதலமைச்சரின் இதுபற்றிய முடிவையடுத்து தமது நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கொழும்பு மேயர் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, இன்றைய கூட்டம் நமது கட்சியால் ஏற்பாடு செய்யப்படவில்லை. அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல்மாகாணசபை முதலைமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சரால் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் பிரசன்னா குணவர்த்தனவும், மத்திய அரசின் தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொள்வதாக உறுதியளித்தார்கள். ஆனால் மாகாணசபையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் இந்த இருவரும் கலந்துகொள்ளவில்லை. இது தமிழ் மக்கள் தொடர்பில் இவர்கள் காட்டும் உதாசீனத்தையும், தமிழ் ஊடகங்களில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பற்றி பேசுபவர்கள் நடைமுறையில் செயலாற்ற தயாரில்லை என்பதையும் காட்டுகின்றது. நமது கட்சி உறுப்பினர்கள் அழைப்பை ஏற்றுகொண்டு சென்றார்கள். தேவையற்ற அரசியலை தவிர்க்கும் நோக்கிலும், சுகவீனம் காரணமாகவும் நான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நமது கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துபேசி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவுசெய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.