ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அரசாங்கத்தை விட்டு முகா விலகாதாம் – ஹக்கீம்

rauf hakeemகிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்து எமது கட்சி முக்கியஸ்தர்கள் இந்த மேடையில் கூறிய சில விடயங்களைக் கேட்கும்போது, அவர் நம்பிக்கைக்குரியவர் என்கிற மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அந்தப் பதவியில் இருக்க முடியும் என்பதனை நான் அறுதியும் உறுதியுமாகக் கூறுகின்றேன் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை, அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம் காங்கிரஸ் விலகாது என்றும், அதற்கான ஆணையை மக்கள் தமக்குத் தரவில்லை என்றும் தெரிவித்த ஹக்கீம், தமது சுய கௌரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது. இதற்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்தில் ஓர் அக்கினிப் பரீட்சை நடைபெறப்போகின்றது. இந்தப் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கமைய முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப்பேரும் – குறித்த அக்கினிப் பரீட்சையை எதிர்கொள்ள இருக்கிறோம். நாடாளுமன்றத்துக்கு வரும் என்ன சட்டமூலமாக இருந்தாலும், கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கமையவே அவற்றினை நாம் எதிர்கொள்ள வேண்டும். சில பத்திரிகைகள் – முஸ்லிம் காங்கிரஸை அவர்கள் விரும்பிய திசைகளிலெல்லாம் இழுத்துக்கொண்டு போகலாம் என்று நினைக்கின்றன. அவர்களுடைய தேவைகளுக்கமைய எமது கட்சியை நடத்த முடியாது. கட்சியின் அடிப்படையை தாரைவார்க்க முடியாது. இந்த பேராளர் மாநாடும், இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும். முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். மேல்மட்ட அமைச்சர்கள் உத்தரவாதங்களைத் தந்திருக்கிறார்கள். அவ்வாறான உத்தரவாதத்தை தந்த அமைச்சர் ஒருவர்தான் அடுத்துவரும் சில நாட்களில் எங்கள் வாக்குகளை நாடாளுமன்றத்தில் எதிர்பார்த்துள்ளார். எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு – நாம் ஒன்றாக இருந்து ஒற்றுமையாக செயல்படுவது முக்கியமானதாகும். நாங்கள் தனித்துவமான அரசியல் செய்கின்றவர்கள். இதனால்தான் பழிவாங்கப்படுகிறோம். அரசாங்கத்தோடு இரண்டரக் கலந்து, சங்கமம் ஆகாத கட்சியினர் என்ற காரணத்தினால் மு.காங்கிரஸ் ஓரக் கண்ணால் பார்க்கப்படுகிறது. கிழக்குமாகாண முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவர் என்ற கருத்து எங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, இந்த மேடையில் எமது கட்சியியைச் சேர்ந்தோர் கூறியதைக் கேட்கும் பொழுது, முதலமைச்சரைப்பற்றிய மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது. மு.கா.வின் கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு அவர் நண்பராக இருக்கிறார் என்பது வேறு விடயம். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சர் பதவியில் இருக்க முடியும் என்பதை நான் மிகவும் உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றேன். நாங்கள் அரசாங்கத்தை விட்டு போகமாட்டோம், அதற்கான ஆணையை மக்கள் எங்களுக்குத் வழங்கவில்லை. ஆனால் எங்களது சுய கௌரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றார். இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத், செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி, பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம், கிழக்கு மாகாண அமைச்சரும் கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.