புதன், டிசம்பர் 26, 2012

மாணவர்கள் விடுதலைக்காக வழக்குத்தாக்கல் செய்ய கூட்டமைப்பு தீர்மானம்

tnaவெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களான வி.பவானந்தன், ப.தர்ஷானந்த், க.ஜெனமேஜெயந், எஸ்.சொலமன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் விரைவில் இந்த மனுத் தாக்கல் செய்யப்படும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டத்துக்கு முரணான வகையிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து அதற்கான சட்ட வியாக்கியானங்களையும் அந்த மனுவில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டவுள்ளது. நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளபோதிலும், அதிலுள்ள முக்கிய சில ஷரத்துகள் சட்டபூர்வமற்ற முறையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு புகுத்தப்பட்ட ஷரத்துகளுள் ஒன்றான 1721/5 விதியின் கீழேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட நான்கு ஒழுங்குவிதிகளுள் 1721/5 ஒழுங்குவிதியானது சரணடைந்தவர்களைப் புனர்வாழ்வின் கீழ் வைத்திருக்க வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒருவரைக் கைதுசெய்து அவரிடம் பலவந்தமாக ஆவணத்தில் கையொப்பம் பெற்று, சரணடைந்தவர் எனக் கூறி புனர்வாழ்வு என்ற பெயரில் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்ற இந்த ஒழுங்குவிதிகளின்கீழ் முடியும் என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனவரி மாத முற்பகுதியில் மனுவைக் கூட்ட மைப்பு தாக்கல் செய்யும் என அக்கட்சி வட்டாரங் களிலிருந்து அறியமுடிகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி இருந்தன. ஆனால், புனர்வாழ்வின் பின்னரே மாணவர்கள் விடுவிக்கப்படுவர் என படைத்தரப்பு திட்டவட்டமாகக் கூறிவருகின்றது. கடந்த நவம்பர் மாத இறுதி வாரத்தில் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.