
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி வரவேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொடர்பில் அமெரிக்கா கையாண்டுவரும் கொள்கை மேன்மேலும் ஆக்கபூர்வமானதாக அமையுமென்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஒபாமாவின் வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் கூறியவை வருமாறு: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு முற்போக்கு வாதி. பன்முகத்தன்மை கொண் டவர். அமெரிக்க மக்களும் பன்முக சமுதாயத்தைக் கொண்டவர்களாக இருப்பதால்தான் மீண்டும் அவரைத் தெரிவுசெய்துள்ளனர். பராக் ஒபாமா தனது முதலாவது பதவிக்காலத்தின் போது இலங்கையைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விடயத்திலும், அனைத்து மக்களும் சுயமரியாதையுடன், நியாயபூர்வமாக வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் மிகத் தெளிவாக இருந்து வந்தார். ஜெனிவாவின் மனித உரிமைகள் தொடர்பான அமர்வில் இலங்கை குறித்து விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து அவரது தலைமையின் கீழ்தான் ஆக்கபூர்வமான விடயங்கள் இடம்பெற்றன. இதுபோன்ற கருமங்கள் தொடருமென்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒபாமாவை வாழ்த்துகின்றோம். இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படவும், மக்கள் சுபீட்சத்துடன் வாழவும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு எப்போதும் உதவுமென்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.