ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 20 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். எதிர்வரும் ஜனவரி மாதம்விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து முக்கிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது, டெசோ மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையை அவரிடம் கையளித்தனர். சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார். இதன்போதே மேற்கண்ட தகவலை தி.மு.கவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு - இலங்கையில் நடைபெற்ற போரில் 90 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டு, பரிதாப நிலையில் இருக்கின்றனர். தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். போரின் போது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர் என அறிவிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் தமிழர்களை மீண்டும் அவர்கள் பகுதிகளில் குடியமர்த்த வேண்டும் என ஸ்டாலின் எடுத்துரைத்தார். ஸ்டாலின் அளித்த ஆவணங்கள் முக்கியமானவை என்று நவநீதம் கூறினார். மேலும், இலங்கை போர்க் குற்றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் அமெரிக்கா கொண்டுவந்து இந்தியா ஆதரித்ததாகும். இது எந்தளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை பேரவை மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். எனது (நவநீதம்பிள்ளை) தலைமையில் குழு ஒன்று ஜனவரி மாதம் இலங்கைக்குச் சென்று மேற்பார்வையிடும் என்று நவநீதம்பிள்ளை கூறினார். - இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.