செவ்வாய், நவம்பர் 06, 2012
திவிநெகும சட்டமூலத்தை ஒழுங்குபத்திரத்தில் உள்ளீர்க்கும் அரசின் முயற்சி முறியடிப்பு.
திவிநெகும (வாழ்வின் எழுச்சி) சட்டமூலத்தை இன்றைய நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றின் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் சேர்ப்பதற்கு அரசாங்கம் கடும் முயற்சி செய்தது.
இந்த முயற்சிக்கு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த விடயம் எடுக்கப்பட்டது.
அரசாங்க கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் திவிநெகும சட்டமூலத்தை ஒழுங்குபத்திரத்தில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினர்.
எனினும், திவிநெகும சட்டமூலம் பற்றி உயர்நீதிமன்றின் தீர்ப்பு வரும்வரை அரசாங்கம் பொறுத்திருக்க வேண்டுமென எடுத்துரைத்த எதிர்க்கட்சியினர், அரசாங்கத்தின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யவும் முற்பட்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் எம்.பி.யான அநுர குமார திஸாநாயக்க ஆகியோரும் அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டித்ததுடன், கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இறுதியாக நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் அதனை ஒழுங்குபத்திரத்தில் சேர்ப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.