வெள்ளி, அக்டோபர் 26, 2012

ஜனாதிபதியின் பிறந்த நாள்: மாவட்ட நிர்வாகம் ஒரு வாரம் கொண்டாட வேண்டுமாம்!

இலங்கை ஜனாதிபதி மகிநத ராஜபக்‌ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பௌத்த கலாசாரப்படி சமய ஊர்வலமும், முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பௌத்த விகாரையில் பௌத்த சமய ஆசாரப்படி, விசேட வழிபாடுகளை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. றுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளை இராணுவத்தினர் வெற்றிகொண்ட மூன்றாம் ஆண்டு நிறைவையும் சேர்த்து கொண்டாட வேண்டும் என்றும், இந்த ஒரு வார காலப் பகுதியில் கிராம சேவை அதிகாரிகள் முழு நேரமும் கடமையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநானிடம் கேட்டபோது, ஜனாதிபதியின் பிறந்தநாளைக் கொண்டாடுமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பொதுவான சுற்றறிக்கை ஒன்றில் அறிவித்திருப்பதாகக் கூறினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள ஹம்பாந்தோட்டையில் வீரகெட்டிய என்னுமிடத்தில் பிறந்தார். அவருக்கு இப்போது 67 வயதாகின்றது. இதனையொட்டி நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் ஆலய வழிபாடுகளுடன் கூடிய கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. மாவட்டங்களின் முக்கிய ஆலயங்களில் தினந்தோறும் பூஜை வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என்று மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கு சுற்றறிக்கை மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.