இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த 8000 பேர் காணாமல் போயிருந்தனர் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர் முகாம்கள் நீண்ட காலம் இயங்குவதனை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என பிளக் தெரிவித்திருந்தார். பாதுகாப்பு முள் வேலிகள் இடப்பட்டிருப்பதனால் மக்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். மூன்று மாதங்கள் வரையிலேயே முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்திருந்தார். முகாம்கள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என தெரிவித்திருந்தார். உதாரணமாக மக்கள் வவுனியா வைத்தியசாலைக்கோ கடைகளுக்கோ செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். முகாமில் தங்கியிருந்தோரில் 8000 பேர் மீண்டும் முகாம் திரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். இடம்பெயர் மக்கள் விரும்பியவாறு வெளியேறிச் செல்ல அரசாங்கம் அனுமதியளித்தால் நிலக்ககண்ணி வெடி ஆபத்துக்களினால் உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, மக்கள் சுதந்திரமாக இடம் நகர்வதனை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என பிளக் வலியுறுத்தியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.