சனி, பிப்ரவரி 16, 2013

உக்கிரமடையும் சர்வதேச அழுத்தம் - பங்களாதேஷிடம் சரணாகதி அடையும் சிறிலங்கா

சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, பங்களாதேஷ்சின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. அதற்கமைய பங்களாதேஷிலிருந்து உடனடியாக 25 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருள்களை கொள்வனவு செய்ய சிறிலங்கா முன்வந்துள்ளது. சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக கனடா உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து வரும் ஏப்ரலில் லண்டனில் கூடவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மூலம், இந்தக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இருந்து சிறிலங்கா விவகாரத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம் பங்களாதேஷிசின் காலைப் பிடித்துள்ளது. கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ள பங்களாதேசுக்கு இரண்டு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அந்த நாட்டின் பிரதமர் சேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்த நடத்தியிருந்தார். நேற்று அவர், பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர் திபு மொனியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புகளின் போது, கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரத்தைச் சேர்த்துக் கொள்வது நீதியற்றது என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு பங்களாதேஷ் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சிறிலங்கா அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடுகளை போக்கும் வகையிலும், பங்களாதேசுக்கு வர்த்தக வாய்ப்பை வழங்கும் வகையிலும், உடனடியாக 5 பில்லியன் ரூபா பெறுமதியாக மருந்துப் பொருட்களை டாக்காவில் இருந்து இறக்குமதி செய்ய சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இருந்தே பெரும்பகுதி மருந்துப் பொருட்களை சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி செய்து வந்துள்ளது. இந்தநிலையில், கொமன்வெல்த் மாநாட்டை இலக்கு வைத்தே திடீரென பங்களாதேஷ்சிடம் இருந்து பெருமளவு மருந்துகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.