யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தான் பதவி விலகுவதாகவும் புதிதாக பதவிக்கு வருபவர்கள் அப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை முதல் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாணவர்களின் வரவு இடம்பெறவில்லையாயினும் அல்லது இனியும் பல்கலைக்கழகத்தில் பிரச்சினை தோன்றும் பட்சத்திலும் தான் பதவி விலகுவேன் என்று அவர் கூறியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர். இதனால் சுமார் இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கைதான மாணவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவும் உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்காவின் அறிவித்தலுக்கமையவும் நாளை முதல் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதென இன்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் விடுவிக்கப்படக்கூடும் என்று அமைச்சர் திஸாநாயக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.