புதிய ஆண்டில் அரசுக்கு கடும் விளைவுகள் ஏற்படும் – கரு எச்சரிக்கை!
ஐ.நாவும் பொதுநலவாய அமைப்பும் விடுத்த கோரிக்கைகளுக்குத் தொடர்ந்தும் செவிமடுக்காமல் அரசு நாட்டின் பிரதான பிரச்சினைகளை உதாசீனம் செய்து வருமானால் புதிய ஆண்டில் கடும் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெய சூரிய எச்சரித்துள்ளார்.நாட்டின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் இதர சம யத்தலைவர்களைக் கூட உதாசீனம் செய்யும் அரசின் போக்கானது விரைவில் எதிர் விளைவுகளை உருவாக்கும் என்பதை அரசு உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒருசில அரச அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ற முறையில் நீதித்துறையையும் சட்டவாக்கத்துறையையும் நடத்தவேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் இறைமையை உயர்வாகக் கருதுங்கள், அதுவே சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாக இருக்கும் என்றும் ஜயசூரிய கூறியுள்ளார். அரசின் மூன்று தூண்களிலும் மக்கள் நம்பிக்கை இழக்க நேருமானால் அது குழப்பகரமாக இருக்கும். அரசு தனது போக்கை மாற்றிக்கொண்டு சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஒருவர் தமது காரைத் தவறான பக்கமாக ஓட்டிச்சென்று எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதிவிட்டு முறைப்பாடு செய்யவேண்டாம் என்று அந்த வாகனச்சாரதியை அச்சுறுத்திய சம்வத்தைக் குறிப்பிட்டுள்ள கரு ஜயசூரிய, இந்நாட்டில் சட்டம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டமானது இன்று அரசையும் அதன் கையாள்களையும் ஒரு விதமாகவும், ஏனையவர்களை வேறு விதமாகவும் நடத்துகிறது என்று தெரிவித்தார் அவர். நாட்டில் ஜனநாயகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நீதித்துறையின் செயற்பாடுகள் முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.