
நெல்லியடி மதிய கல்லூரியில் நாளையும் நாளைமறுதினமும் நடைபெறவிருந்த வடமாகாண தமிழ் இலக்கிய பெருவிழாவில் ஆய்வரங்கங்கள் தவிர பண்பாட்டு நிக்ச்சிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வடமாகாண தமிழ் இலக்கிய பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று மாவீரர் தினம் என்பதால் ஆளுநர் நிகழ்வைப் பிற்போடுமாறு பணித்திருந்தார். இந்த நிலையில் நாளை 8 ஆம் திகதி விழாவை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கென நான்கு கலர்களில் வர்ண அழைப்பிதழும் அச்சிடப்பட்டது. அச்சிடப்பட்ட அட்டையில் அமைச்சர் டக்ளஸின் பெயரோ,அவரது படமோ பொறிக்கப்படவில்லை.பதிலாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி அமைச்சரின் காதில் எட்டவே அட்டையைத் தயாரித்தவர்கள் அதில் மாற்றம் செய்து அமைச்சரின் படத்தை பொறித்து மீண்டும் அட்டை தயாரித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியது. அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டதால்,அந்த விடயம் அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதனால் ஆய்வரங்கைமட்டும் நடத்திவிட்டு ஏனைய பண்பாட்டு நிகழ்வுகளை இடைநிறுத்துமாறு அமைச்சர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன. 8ஆம்,9ஆம் திகதிகளில் நிகழ்வுகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் நிகழ்வில் பங்குகொள்பவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான உணவு,தங்குமிடவசதி போன்ற ஒழுங்குகளும் ஏற்பாடாகிவிட்டன.இவற்றுக்கும் பல லட்சம் ரூபா செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் வடமாகாண இலக்கிய பெருவிழாவில் நாளை ஆய்வரங்கம் மட்டுமே இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் வடமாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் தகவல் தருகையில், எந்த அழுத்தங்களுக்காகவும் நாம் நிகழ்வை நிறுத்தவில்லை,அமைச்சர்,ஆளுநர் ஆகியோர் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொள்வதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போயுள்ளது. அழைப்பு அட்டை தயாரிப்பதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அதற்கு முதல் வருடத்தில் விருது பெறும் குழுவின் படம் பிரசுரிக்கப்படும். அவ்வாறே இந்த அட்டையிலும் பிரசுரித்துள்ளோம். கலைநிகழ்வுகள் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளன. அவை ஓரிரு வாரங்களில் நடத்தப்படும். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.