.jpg)
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக கையளிக்கப்பட்ட குற்றப்பிரேரணையில் நானும் கையொப்பமிட்டுள்ளேன். அந்த பிரேரணையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை சபாநாயகரே வகைப்படுத்துவார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்' என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் குற்றப்பிரேரணையில் 75பேர் கைச்சாத்திட வேண்டும். எனினும் இந்த குற்றப்பிரேரணையில் அதற்கு மேலும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சட்டமூலம் ஒன்று தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை செயலாளருக்கு அனுப்பி வைத்தது ஒரு விடயமாகும். இதனைவிடவும் மேலதிகமான விடயங்கள் இருக்கின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 'நிறைவேற்று, நீதிமன்றம், அரசியலமைப்புக்கு இடையில் புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்நிலையில், சபாநாயகர் கடந்த இரண்டொரு வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தின் உயர்தன்மை, அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரம், மக்களின் ஆணை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கூட்டொன்றை விடுத்தார். அரசியலமைப்பின் மூன்றாம் பிரிவின் பிரகாரம் குற்றச்சாட்டுக்கள் திருப்தியளிக்காவிடின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த பிரேரணையில் எதிர்க்கட்சிகள் கையொப்பமிடவேண்டிய சம்பிரதாயம் இல்லை. ஆனால், தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம். குற்றச்சாட்டுக்களைத் தீர்மானிக்கும் சபாநாயகர், அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு தெரிவுக்குழுவை அமைப்பதா? இன்றேல், நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவதா? எனத் தீர்மானிப்பார். இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதம நீதியரசர் பதிலளிக்கலாம். இதுவே நடைமுறையாகும்' என்று அமைச்சர் குறிப்பிட்டார். இங்கு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், 'திவிநெகும (வாழ்வின் எழுச்சி) சட்டமூலத்துக்கு பின்னரா அரசாங்கம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டை குற்றப்பிரேரணையை சமர்ப்பித்தது? திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு எதிரான உத்தரவை மாற்றியமைத்தது போல எதிர்க்காலத்திலும் நடக்குமா? பிரதம நீதியரசர் ஒருவரை ஜனாதிபதி எவ்வாறு நியமிப்பார்? பிரதம நீதியரசர் கல்வித் தகுதி இல்லாதவர் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா கூறியிருப்பது எந்த அடிப்படையில்? அவரது கணவர், மீதான தேசிய சேமிப்பு வங்கி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களும் அதில் உள்ளடங்குமா?' என வினவினர். இக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், '78ஆவது அரசியலமைப்பின் பிரகாரமே பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமிப்பார். அதில், சிரேஷ்டத்துவம் கவனத்தில்கொள்ளப்படும். முன்னாள் நீதியரசர், தற்போதைய நீதியரசரை விடவும் சிரேஷ்டத்துவம் குறைந்தவர். எனினும் அவர் குறுகிய காலத்துக்கு மட்டுமே பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலேயே தீர்ப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. இது ஒரு தவறான செய்தியாகும். கல்வித் தகுதி தொடர்பில் பேசுவதற்கு நான் தகுதியில்லாதவன். பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி மாகாணசபை உறுப்பினர்களும் முன்வைத்துள்ளனர்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.