கடுமபாதுகாப்பஏற்பாடுகளுடஅமைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் மற்றொரு மனித இனப்படுகொலை நடைபெற்றிருக்கின்றது. வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரங்களில் 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், கொல்லப்பட்டவர்களின் தொகை இதனைவிட அதிகமானது. இதனைவிட விஷேட அதிரப்படையினர் மற்றம் இராணுவத்தினர் உட்பட 100 பேர் வரையில் காயமடைந்திருக்கின்றார்கள். சிறையில் வெடித்த கலவரம் சுமார் 10 மணித்தியாலத்தின் பின்னரே இராணுவக் கொமாண்டோக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகூடிய பாதுகாப்பான சிறைச்சாலையிலேயே கைதிகளுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை என்ற செய்தியைத்தான் இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கின்றது. இலங்கையில் சிறைச்சாலைகளுக்குள் கலவரம் உருவாகுவது இதுதான் முதன்முறையல்ல. 1983 இல் 58 தமிழ்க் கைதிகள் கோரமாகக் கொல்லப்பட்டது இதே வெலிக்கடைச் சிறைச்சாலையில்தான். சிங்களக் கைதிகளால் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டபோது சிங்களச் சிறைக் காவலர்களும் பொலிஸாரும் அப்போது வெறும் பார்வையாளர்களாகவே இருந்தார்கள். தமிழ்க் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்குள்
செல்வதற்கு கதவைத் திறந்துவிட்டது மட்டுமன்றி தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொடுத்தவர்களும் சிங்கள சிறைக் காவலர்கள்தான். சில மாதங்களுக்கு முன்னரும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இது போன்ற பெரும் கலவலரம் ஒன்று இடம்பெற்றது. சிறைச்சாலைக்குப் பொறுப்பான அதிகாரியை மாற்ற வேண்டும் என கைதிகள் ஆரம்பித்த போராட்டம் அப்போது பெரும் கலவரமாக வெடித்தது. வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் சில மாதங்களுக்கு முன்னர்தான் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றது. சம்பந்தப்பட்ட கைதிகள் பின்னர் அநுராதபுரத்துக்கக் கொண்டுவரப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதுடன், மிருகத்தனமான தாக்குதலுக்கும் உள்ளானார்கள். இதில் இருவர் பின்னர் மரணமடைய ஏனைய கைதிகள் ஊனமடைந்தவர்களாகவே உள்ளனர். இதே?போல, கண்டி பல்லேகலை
சிறைச்சாலை மற்றும் அநுராதபரம் சிறைச்சாலைகளில் கடந்த வருடங்களில் பெரும் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. சிறைச்சாலைகளில் அமைதியின்மை காணப்படுவது வழமையாக இருக்கின்ற போதிலும், வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கவரம் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. இந்தக் கலவரத்தின் பின்னணி, அது அடக்கப்பட்ட முறை என்பன தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கொழும்பு நகரின் மத்தியில் அமைந்திருக்கும் வெலிக்கடைச் சிறைச்சாலைதான் இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் மிகவும் பெரியது. இங்கு சுமார் 4,000 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் போதைவஸ்த்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள். மற்றும் கிரிமினல் குற்றவாளிகள். இங்கு தமிழ் அரசியல் கைதிகளின் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு வார்ட்டில் மட்டுமே இங்கு தமிழ்க் கைதிகள் வைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் எவ்வகையிலும் சம்பந்தப்படவில்லை. இருந்தபோதிலும் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் பிரஜா உரிமையைப் பெற்றுள்ள இந்தியர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் சடலங்கள் உரிய முறையில் இனங்காணப்படும் வரையில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக வெளியிடமாட்டார்கள் எனத் தெரிகின்றது. வெலிக்கடைச் சிறையில் வெள்ளிக்கிழமை நண்பகலளவில் ஆரம்பமாக மறுநாளய் சனிக்கிழமை அதிகாலை வரையில் இடம்பெற்ற இந்தக் கலவரத்துக்குக் காரணம்தான் என்ன? சிறைக்கைதிகள் மத்தியில் போதைவஸ்த்துப் பாவனை அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். இதனைவிட மறைத்து வைத்திருந்து கைத் தொலைபேசிகளையும் இவர்கள் பெருமளவுக்குப் பயன்படுத்துகின்றார்கள். இவற்றைக் கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கை ஒன்றுக்காக விஷேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை சிறைச்சாலைக்குள் சென்ற போதே கலவரம் வெடித்தது. இது ஒரு வழமையான சோதனை நடவடிக்கை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிக்கின்றார். சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறான சோதனைகளை வழமையாக நடத்துவார்கள். ஆனால், அவர்கள் கைதிகளுடன் ஒத்துழைக்கலாம் என்ற சந்தேகத்தையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைக்கு அண்மைக் காலமாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சிறைச்சாலைகள் திணைக்களம் பயன்படுத்துகின்றது. அந்த வகையில்தான் வெள்ளிக்கிழமையும் வழமையான சோதனை நடவடிக்கை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகசின் சிறையிலும், வெலிக்கடைச் சிறையின் குறிப்பிட்ட சில வார்ட்டுக்களையும் சோதனையிட்ட பின்னர் கடுமையான குற்றவாளிகளை அடைத்துவைத்துள்ள பகுதியை நோக்கி பொலிஸ் அதிரடிப்படையினர் சென்ற போதுதான் மோதல் வெடித்தது. படையினர் தேடுதல் நடத்துவதை எதிர்த்த கைதிகள், அவர்களைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஏற்பட்டமோதலையடுத்து கைதிகள் கற்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு அதிரடிப்படையினரை நோக்கி தாக்குதலை நடத்தத் தொடங்கினார்கள். கைதிகள் தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகவே இருந்துள்ளார்கள். நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்த அதிரடிப்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தையும் நடத்தினார்கள். இருந்தபோதிலும் இலைமைகள் மோசமடைந்தது. கைதிகள் தயார் நிலையில் இருந்த காரணத்தால் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது அதிரடிப்படையினருக்கு இலகுவானதாக இருக்கவில்லை. கைதிகள் சிறைச்சாலைக்குள் இருந்த இரண்டு ஆயுதக்களஞ்சியங்களில் ஒன்றை உடைத்த கைதிகள், அதற்குள் இருந்த தன்னியக்கத் துப்பாக்கிகளை அபகரித்து அதிரடிப்படையினரைத் தாக்கத் தொடங்க நிலைமைகள் மோசமடைந்தது. சுமார் 100 வரையிலான தன்னியக்கத் துப்பாக்கிகள் அவர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இரண்டாவது ஆயுதக்களஞ்சியத்தைத் தாக்குதவற்காக அவர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. கைதிகள் ஆயுதக்களஞ்சியத்தைக் கைப்பற்றிய தகவல் பாதுகாப்புத் தரப்பினருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சிறைச்சாலையின் ஆயுதக்களஞ்சியம் இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில், கைதிகளால் உடைத்து உட்புகுந்து இலகுவாக ஆயுதங்களைக் கைப்பற்றக் கூடிய நிலையில் எதற்காக வைக்கப்பட்டிருந்தது என்ற கேள்வி இப்போது பலமாக எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் 'லோட்' பண்ணப்பட்டு வைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், வெலிக்கடைச் சிறையின் ஆயுதக் களஞ்சியத்தில் துப்பாக்கிகள் அனைத்தும் உடனடியாகப் பயன்படுத்தப்படும் வகையில் 'லோட்' பண்ணப்பட்டே வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கைதிகளில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் பரீட்சயம் இல்லாதவர்களாக இருந்தமையால் படையினர் தரப்பில் இழப்புக்கள் குறைவாக இருந்துள்ளது. கைதிகள் தாம் கைப்பற்றிய தன்னியக்கத்துப்பாக்கிகளுடன் சிறைச்சாலையின் கூரையில் ஏற்நின்று ஆர்ப்பரிப்பதை உள்ளுர் தொலைக்காட்சிகள் காண்பித்தன. பத்திரிகைகள் இணையத்தளங்களும் அது தொடர்பான படங்களைப் பெருமளவுக்கு வெளியிட்டிருந்தன. ஆயுதங்கள் கைதிகளின் கைகளுக்குள் சென்றதையடுத்தே அதிரடிப்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், நள்ளிரவு வரையில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவாறிருந்தது. இதில் சுமார் படுகாயமடைந்த சுமார் 60 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 16 பேர் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறைச்சாலைக்குள் இருந்து பிரதான வாயில் ஊடாக முச்சக்கர வாகனம் ஒன்றில் ஆயுதங்களுடன் தப்பிச் செல்ல முற்பட்ட 4 கைதிகள் மீது படையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதில் நான்கு கைதிகளும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறையின் முன்பாக குறிப்பிட்ட முச்சக்கர வாகனம் நிற்பதை மறுநாளும் காண முடிந்தது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறைக் கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்தவர்களில் பலர் அதிரடிப்படையினர். அதிரடிப்படையின் தளபதியும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரணவன்ன என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வெலிக்கடைச் சிறைச்சாலை கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆயுதக்களஞ்சியத்தை உடைத்து கைதிகள் ஆயுதங்களை எடுத்திருப்பதால் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தி கட்டுப்பாட்டை திரும்பப்பெற முடியாத நிலையில் அதிரடிப்படை இருந்தது. அத்துடன் அதிரடிப்படையின் தளபதியும் படுகாயமடைந்து களமுனையிலிருந்து அகற்றப்பட்டிருப்பதால் அதிரடிப்படையினரால் தாக்குதலை முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறைச்சாலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இராணுவ கொமாண்டோ படையணி ஒன்று அதிரடித்தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள். இதன்மூலம் சிறைச்சாலை முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இராணுவத்தினர் சிறைச்சாலைக்குள் பிரவேசித்ததையடுத்து அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சிறைச்சாலைக்குள் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட அதிரடிப்படையைச் சேர்ந்த பலரும் இராணுவத்தினால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இராணுவக் கொமாண்டோக்கள் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் பயங்கரமான கிரமினல்கள் எனவும் சொல்லப்படுகின்றது. கைதிகளின் கிளர்ச்சிக்கு இவர்களே தலைமைதாங்கியதாகவும் அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், குறிப்பிட்ட 11 பேரும் அடையாளம் காணப்பட்டே கொல்லப்பட்டதாக சிறைச்சாலையிலிருந்து கிடைத்த வேறு சில தகவல்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை இரவிரவாக இராணுவ கவச வாகனங்களும், அம்புலன்ஸ் வாகனங்களும் அவசரமாக சிறைச்சாலைக்குள் சென்று வருவதைக் காணமுடிந்தது. இந்த நடவடிக்கை சனிக்கிழமை காலை வரையில் தொடர்ந்தது. இந்த நடவடிக்கை முடிவுக்கு வந்து இப்போது அமைதியான நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் பதில் காணப்பட வேண்டிய சில கேள்விகள் உள்ளன. 1. சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியம் இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் ஏன் வைக்கப்பட்டிருந்தது? 2. சோதனை நடத்த முதலில் சென்ற பொலிஸ் அதிரடிப்படையினருக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பை எந்தளவுக்குப் பெற்றிருந்தார்கள்? 3. சிறைச்சாலை அதிகாரிகளைத் தவிர்த்து அதிரடிப்படையினரை இவ்வாறான சோதனை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? 4. இவ்வாறான சோதனை நடவடிக்கைகளுக்கு கைதிகளின் எதிர்ப்பு வழமையாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் மாற்று உபாயம் ஒன்றை அதிகாரிகளால் ஏன் வகுக்க முடியவிலலை. இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடியனால் இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறுவதைத் தவித்துக்கொள்ளலாம்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.