வெள்ளி, செப்டம்பர் 07, 2012

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்புப் பிரார்த்தன

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்புப் பிரார்த்தன தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் காணாமல் போனவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டியும் 1008 தேங்காய் உடைத்து காளியிடம் சிறப்புப் பிரார்த்தனை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சர்வதேச கைதிகள் தினமான செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் காணாமல் போனவர்கள் வீடு திரும்புவதற்கும் வவுனியா, குருமன்காட்டில் உள்ள காளிகோவிலில் காலை 10 மணிக்கு 1008 சிதறு தேங்காய் உடைத்துச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. எனினும் அவர்களின் விடுதலை தொடர்பாக நாம் மேற்கொண்ட பல முயற்சிகளும் பலனற்றுப் போயுள்ளன. இதுமட்டுமன்றி சிறைக்கூடங்கள் கூட தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பாதுகாப்பான இடமாகத் தோன்றவில்லை. அதற்கு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் நிமலரூபன், தில்ருக்ஷன் ஆகியோர் மரணமடைந்தனர். சதீஸ்குமார் நினைவிழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளின் உயிரையும் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளோர், சமூக சேவகர்கள், சமுதாய நலனில் அக்கறை உள்ளோர் ஆகிய அனைவரதும் கடமையாகும். சிறைகளிலும் வதைமுகாம்களிலும் மற்றும் பிற இடங்களிலும் வாடுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில், சர்வதேச கைதிகள் தினத்தன்று இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறைகொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி உள்ளிட்ட தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுடன் சிறைக்கூடங்கள், தடுப்பு முகாம்கள் மற்றும் பிற இடங்களில் உள்ளவர்களின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.